திருவனந்தபுரம்,
சீனாவில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் கேரளாவில் முதன்முறையாக, சீனாவின் உகான் நகரில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களிடம் இருந்து இந்த பாதிப்பு வெளியே தெரிய தொடங்கியது. எனினும், தொடர்ந்து அளித்த சிகிச்சையில் அவர்கள் குணமடைந்தனர்.
நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று 6வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்து உள்ளது.
இதுபற்றி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இதுவரை இல்லாத வகையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது ஒரு நாளில் மிக அதிக எண்ணிக்கை ஆகும். தொடர்ச்சியாக 6வது நாளாக இன்று, நாளொன்றுக்கு 100 எண்ணிக்கையை விட கூடுதலாக பாதிப்பு பதிவாகி உள்ளது.
கேரளாவில் இதுவரை 3,603 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அவர்களில் 1,691 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த 152 பேரில் 98 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 46 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் பதிவான பாதிப்பு எண்ணிக்கையில் 90 சதவீதத்தினர் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் ஆவர் என்று அவர் கூறியுள்ளார்.