புதுடெல்லி,
சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அறியப்படாத கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அழிவை தடுக்க சீனா மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தடுப்பூசி தயாரிப்பதற்கான தீவிர முயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் மும்பையில் இருவர், பெங்களூருவில் ஒருவர், ஹைதராபாத்தில் ஒருவர், கேரளாவில் ஏழு பேர் என 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அவர்கள் அந்தந்த மாநகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனிமையாக வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரெலியாக இந்தியர்கள் யாரும் சீனா செல்ல வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் அனைத்து மாநிலங்கள், மாவட்ட சுகாதாரத்துறை அமைச்சர்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 7 சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.