மந்திரி மீது ஊழல் புகார்
சிவசேனாவை சேர்ந்த அனில் பரப் மாநில போக்குவரத்து துறை மந்தியாக உள்ளார். இவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான மந்திரிகளில் ஒருவர் ஆவார். இந்தநிலையில் இவர் மீது நாசிக்கை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்.டி.ஓ) ஆய்வாளர் கஜேந்திர பாட்டீல் பரபரப்பு ஊழல் புகார் தெரிவித்து உள்ளார். இவர் கடந்த 16-ந் தேதி இ-மெயில் மூலம் பஞ்வதி போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரில் மாநிலத்தில் வட்டாரப்போக்குவரத்து துறையில் பணிநியமனம், பணியிடமாற்றத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடந்து இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த ஊழலில் போக்குவரத்து துறைமந்திரி அனில் பரப் மற்றும் 6 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இதேபோல எல்லை சோதனை சாவடிகள், தனியார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகள் முடித்து வைப்பது, பி.எஸ்.-4 ரக வாகனங்களுக்கு சட்டவிரோதமாக வாகனப்பதிவு செய்வதிலும் ஊழல் நடப்பதாக கூறியுள்ளார்.
மேலும் போக்குவரத்து துறை அதிகாரி தனது புகார் தொடர்பாக 17-ந் தேதி பஞ்வதி பாலீஸ்நிலையத்திற்கு நேரிலும் சென்று உள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "புகார் அளித்தவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்யவும், ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அவரை போலீஸ்நிலையத்திற்கு அழைத்து இருந்தோம். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனினும் புகாரின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு அதை நாங்கள் புறம்தள்ளவில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் தீபக் பாண்டே, துணை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையை 5 நாட்களுக்கு முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் விசாரணையை முடிக்க போலீசார் மேலும் சில நாட்கள் எடுத்து கொள்வார்கள்" என்றார்.
சமீபத்தில் போலீசில் இருந்து நீக்கப்பட்ட வெடிகுண்டு கார் வழக்கு குற்றவாளி சச்சின்வாசேவும் மந்திரி அனில் பரப் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். மும்பை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் வசூலித்து தரும்படி அவர் கூறியிருந்தார். அந்த குற்றச்சாட்டை அனில் பரப் சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரே மீது சத்தியம் செய்து மறுத்தார். மேலும் விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறினார்.
இந்தநிலையில் போக்குவரத்து துறை அதிகாரியே மந்திரி மீது புகார் அளித்து இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மகாவிகாஸ் கூட்டணியில் உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் ஊழல் புகாரில் சிக்கி பதவியை இழந்தார். இந்தநிலையில் மேலும் ஒரு மந்திரி மீது ஊழல் புகார் எழுந்து உள்ளது.