புதுடெல்லி,
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
இந்த நிலையில், இருமல், காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் யார் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் கொரோனா தொற்று நோயாளிகளுடன் நெருங்கி பழகியவர்களுக்கு 5ம் நாளில் இருந்து 14ம் நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.