புதுடெல்லி,
சமீபத்தில் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜி.எஸ்.டி. 1975-ம் ஆண்டு வெளிவந்த ஷோலே திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரமான கப்பார் சிங்குடன் ஜி.எஸ்.டியை ஒப்பிட்டார். ஜி.எஸ்.டி. என்றால் கப்பார் சிங் வரி எனக்கூறினார். இதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உடனடியாக பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில் 2ஜி மற்றும் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்கள், முறையான ஒரு வரித்திட்டத்தை இயல்பாகவே எதிர்ப்பார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி. தொடர்பாக ராகுல் காந்தி மீண்டும் மத்திய அரசை சாடியுள்ளார். தனது டுவிட்டர் தளத்தில், இந்தி பேச்சுவழக்கில் சில கருத்துகளை வெளியிட்டுள்ள அவர், அருண் ஜெட்லியை டாக்டர் ஜெட்லி என கிண்டலடித்துள்ளார்.
அவர் கூறுகையில், டாக்டர் ஜெட்லி அவர்களே, பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யால் நாட்டின் பொருளாதாரம் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ளது. மற்றவர்களை விட நான் குறைந்தவன் அல்ல என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் மருந்துகளால் ஒரு பலனும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.