தேசிய செய்திகள்

உபேர் டிரைவரை கொலை செய்து துண்டுதுண்டுகளாக நறுக்கி சாக்கடையில் வீசியெறிந்த ஜோடி

டெல்லியில் உபேர் டிரைவரை கொலை செய்து துண்டுதுண்டுகளாக நறுக்கி சாக்கடையில் வீசியெறிந்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி

டெல்லியின் சாகர்பூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்த், உபேர் கார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 29-ம் தேதி முதல் வீடு திரும்பவில்லை எனவும், செல்போன் ஆப் செய்யப்பட்டிருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை என அவருடைய மனைவி ஆர்த்தி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார் கோவிந்த்தை தேடி வந்தனர். அவருடைய ஜிபிஎஸ் கருவியை வைத்து ஆய்வு மேற்கொண்டபோது கடைசியாக மதன்கிரியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் கபாசேரா பார்டருக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு சென்றடைந்ததும், காரின் ஜிபிஎஸ் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மெகருலி, குருகிராம் இடையே கோவிந்தின் கார் மற்றும் மொபைலுடன் ஒரு ஜோடி சென்றுகொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பரகத் அலி (34) மெகருலி-குருகுரம் சாலையின் கிராமப்புற பகுதிக்கு அருகே சொந்தமாக ஒரு மருத்துவமனை திறக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் தன்னுடைய வேலையை இழந்து கடனாளியாக மாறியிருக்கிறார். இவர் மீது ஏற்கனவே ஒரு கற்பழிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.

திருமணமான சீமா சர்மா (30) கணவனை பிரிந்து பரகத் அலியுடன் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று முன்பதிவு செய்து காரை வரவழைத்துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைந்ததும் கோவிந்திற்கு மயக்கமருந்து கலந்த டீ மற்றும் பிஸ்கட் கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்டதும் மயக்கமடைந்த அவருடைய கழுத்தை கயிற்றால் நெரித்து கொன்றுவிட்டு, காரை எடுத்து சென்றுள்ளனர்.

காரை மொராதாபாத்தில் தல்பத்புரா பகுதியில் உள்ள கோயிலுக்கு பின்புறம் மறைத்து விட்டு வீடு திரும்பி இருக்கின்றனர். அடையாளம் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக கோவிந்தின் உடலை துண்டுகளாக நறுக்கி ஒரு பையில் அடைத்துள்ளனர். அதனை எடுத்துக்கொண்டு நொய்டாவிற்கு அருகே உள்ள ஒரு கால்வாயில் வீசியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.