மும்பை,
மும்பை கார் பகுதியில் நடிகை கங்கனா ரணாவத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்து இருப்பதாகவும், அதை இடிக்க போவதாகவும் மும்பை மாநகராட்சி கடந்த 2018-ம் ஆண்டு கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து கங்கனா தின்தோஷியில் உள்ள சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
மேலும் தனது வீட்டை இடிக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். எனவே கோர்ட்டு விசாரணை முடியும் வரை கங்கனாவின் வீட்டை இடிக்க மாநகராட்சிக்கு கோர்ட்டு தடை விதித்து இருந்தது.
இந்தநிலையில் 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சவான் நடிகை கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உள்ளார். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கங்கனாவுக்கு 6 வாரம் கால அவகாசம் வழங்கி உள்ளார்.
கடந்த செம்படம் 9-ந் தேதி சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததாக கூறி பாந்திரா பாலி ஹில் பகுதியில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களா வீட்டின் ஒரு பகுதியை மாநகராட்சி இடித்து தள்ளியது. ஆனால் நடிகையின் வீட்டை இடித்தது சட்டவிரோதம் என மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.