காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் மருத்துவமனையில் இடம் இல்லாததால் கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலதிபர் தனி விமானம் மூலம் சென்னைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் வெளியிடப்படாதா அந்த தொழிலதிபர் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரை சேர்ந்தவர். அங்கு அவர் தனது தொழிலை நடத்தி வந்தார். அந்த தொழிலதிபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், குஜராத்தில் உள்ள மருத்துவமனைகள் அனைத்து நிரம்பி வழிவதால் அந்த தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த தொழிலதிபர் கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை அனுக்கியுள்ளார். அந்த தனியார் மருத்துவமனை அந்த குஜராத் தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது.
இதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்ட் அந்த தொழிலதிபர் நேற்று முந்தினம் தனி விமானம் மூலம் தனது குடும்பத்தினருடன் குஜராத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் தரையிரங்கிய அந்த தொழிலதிபர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.