திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கொரோனா வைரசின் பாதிப்பைச் சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 6 நாள் ஊதியம், 5 மாதங்கள் பிடிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கேரள நீர் ஆணையப் பணியாளர் அமைப்பு, காங்கிரசின் ஐஎன்டியுசி, கேரள வித்யூதி மஸ்தூர் சங்கம் ஆகியவை இணைந்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசின் ஊதியப் பிடித்தம் உத்தரவுக்கு எதிராகத் மனுத்தாக்கல் செய்தது. அதில் அரசின் உத்தரவு, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சொத்துரிமைக்கு எதிராக உள்ளதை சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி குரியன் தாமஸ் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மாநில அரசின் உத்தரவில் பல்வேறு சந்தேகங்களுக்குரிய முகாந்திரங்கள் இருக்கின்றன என்பதால், இந்த உத்தரவை அடுத்த 2 மாதங்களுக்கு செயல்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.