புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 6,036 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கிலும் 145 நாடுகளில் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 107 ஆக அதிகரித்து இருந்தது.
இதனை அடுத்து கொரோனா வைரசை தொற்றுநோய் என்று உத்தரகாண்ட் அரசாங்கம் அறிவித்ததுடன், உத்தரகாண்டில் அனைத்து திரையரங்குகள் மற்றும் கல்லூரிகள் வருகிற 31ந்தேதி வரை மூடப்படுகின்றன என்றும் அறிவித்தது.
மராட்டியத்தில் நகர்ப்புற பகுதிகளில் அமைந்த அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் வருகிற 31ந்தேதி வரை மூடப்படுகின்றன என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதேபோன்று, அசாமில் பள்ளி கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை வருகிற 29ந்தேதி வரை உடனடியாக மூடப்படுகின்றன.
அசாமில் பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல் கவனித்து கொள்ளும்படி அனைத்து துணை ஆணையாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, உடற்பயிற்சி கூடங்கள், இரவு விடுதிகள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவற்றை மார்ச் 31ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
எந்தவித மத, சமூக, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் என 50 பேருக்கு மேல் ஒன்றாக கூடுவதற்கு மார்ச் 31ந்தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையானது போராட்டங்கள் நடத்துவதற்கும் பொருந்தும் என கூறினார்.
எனினும், திருமணங்கள் நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஆனால், திருமண தேதிகளை மக்கள் தள்ளி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.