புதுடெல்லி,
சென்னை,அகமதாபாத், சூரத், ஐதராபாத் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டதாவது;- நாட்டின் சில இடங்களில் ஊரடங்கு விதிகள் மீறப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஊரடங்கு விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது ஆகும். கொரோனா பரவலுக்கு இதுவே வழிவகுக்கிறது.
ஹாட்ஸ்பாட்(கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக இருக்கும் இடங்கள்) மாவட்டங்கள் அல்லது ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக உருவெடுத்து வரும் அகமதாபாத் மற்றும் சூரத் (குஜராத்) தானே (மராட்டியம்), ஐதராபாத் (தெலுங்கானா), சென்னை (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ளது.
நாட்டில் கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் மதிப்பீடு செய்வதற்கு 10 மத்தியக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, அந்தந்த நகரங்களில் ஆய்வு செய்து, மாநில அரசுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும். ஏற்கனவே, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு மத்திய குழு சென்றிருந்தது கவனிக்கத்தக்கது.