2008 மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா பா.ஜனதா சார்பில் போபால் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியது. இதனையடுத்து சாத்வி பிரக்யா சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தேர்தலில் போட்டியிடும் சாத்வி பிரக்யா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசியபோது, பசுவில் இருந்து கிடைக்கும் பொருட்களால் எப்படி தான் பயன் அடைந்ததாக விளக்கமாக கூறியுள்ளார். அவருக்கு கிடைத்ததில் மிகவும் முக்கியமான நலன் என்னவென்றால் தொடர்ச்சியாக பசு கோமியத்தை குடித்து வந்ததால் அவருடைய மார்பக புற்றுநோய் குணமாகியுள்ளது என்பதுதான்.
எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது, இப்போது அது குணமாகி விட்டது. நான் தொடர்ச்சியாக பசு கோமியம் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சேர்க்கப்பட்ட பஞ்சகாவ்யாவை தொடர்ந்து எடுத்துக் கொண்டதால் எனக்கு பலன் கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளார். பசுவை வைத்து இந்தியாவில் அரசியல் நகர்வு காணப்படுவது தொடர்பாக பேசுகையில் இதனை தெரிவித்துள்ள சாத்வி பிரக்யா, பல்வேறு இடங்களில் பசுக்கள் நடத்தப்படும் முறை மிகவும் வேதனையை தருகிறது என கூறியுள்ளார். மேலும் பசுவின் முதுகை தடவுகையில் இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.