கொச்சி,
கேரளாவில் எர்ணாகுளம் நகரில் மகாராஜா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் வளாகத்தில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவரான கல்லூரி மாணவர் அபிமன்யூ (வயது 20) என்பவரை கேம்பஸ் பிரன்ட் மற்றும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) ஆகிய அமைப்புகளின் தொண்டர்கள் குத்தி கொலை செய்தனர். இந்த தாக்குதலில் வேறு 2 மாணவர்களும் காயமடைந்து உள்ளனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய அமைப்பின் 3 பேரை போலீசார் கைது செய்து காவலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அபிமன்யூ கல்லூரியில் 2ம் வருட படிப்பு படித்து வந்துள்ளார். இடுக்கி மாவட்டத்தின் வட்டவடா பகுதியில் வசித்து வந்துள்ளார். அந்த அமைப்பின் இடுக்கி மாவட்ட குழுவின் உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.
கல்லூரி சுவரை பயன்படுத்துவதில் மாணவர் அமைப்பினரிடையேயான விவகாரத்தில் தாக்குதல் நடந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர் படுகொலைக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க இதுபோன்ற திட்டமிட்ட கொலைகளில் பி.எப்.ஐ. மற்றும் அதன் மாணவர் அமைப்பு ஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் பத்திரிகையான தேஷபிமானி வெளியிட்டுள்ள அலுவல்பூர்வ அறிக்கை ஒன்றில், தலீபான் மாதிரி தாக்குதல்களை எஸ்.டி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தாக்குதல்களில் இதுவரை எங்கள் கட்சியின் 9 தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட அவர்களின் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதற்காக கேரளா முழுவதும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக முதல் பிரசாரம் ஜூலை 10ந்தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.