கோழிக்கோடு,
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இதில் அரசியல் தலைவர்களின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தலைவர்களின் வீடுகள் மாறி மாறி தாக்கப்படுவதால் பதற்றம் நீடித்து வருகிறது.
ஆனாலும் மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் தலசேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில், கோயிலண்டி பகுதியில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் குழு உறுப்பினரான ஷிஜு என்பவரின் வீடு மீது இன்று காலை நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. உள்ளூர் தலைவர்களில் ஒருவரான வி.கே. முகுந்தன் என்பவரது வீட்டின் மீதும் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. எனினும் இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
கேரளாவின் கோயிலண்டி பகுதியில் நேற்று பா.ஜ.க. தொண்டர் ஒருவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. கண்ணூர் நகரில் இருந்து 18 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கடந்த சில நாட்களில் 2,187 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 6,914 பேரை கைது செய்துள்ளனர்.