புதுடெல்லி,
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நவோதயா, கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (சி.டி.இ.டி.) நடத்தப்பட்டு வருகிறது.
தேசிய அளவில் நடைபெறும் இந்த தேர்வை ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி போன்ற 20 மொழிகளிலும் எழுத முடியும். ஆனால் இந்த வசதியை சி.பி.எஸ்.இ. திடீரென ரத்து செய்தது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 17 பிராந்திய மொழிகளை நீக்கிவிட்டு வெறும் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே இந்த ஆண்டு முதல் மேற்படி தேர்வு எழுதலாம் என அறிவித்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம், இதில் இருந்து 2 மொழிகளையே தேர்வர்கள் விருப்ப மொழியாக தேர்வு செய்ய வேண்டும் என அறிவித்தது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்வாறு நாடு முழுவதும் கிளம்பிய இந்த எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது. தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை ரத்து செய்யும் முடிவை ரத்து செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், சி.டி.இ.டி. தேர்வு, ஏற்கனவே நடத்தப்பட்டது போல அனைத்து இந்திய மொழிகளிலும் நடத்தப்படும். இந்த தேர்வை ஏற்கனவே நடத்தியது போல 20 மொழிகளிலும் நடத்துமாறு நான் சி.பி.எஸ்.இ.க்கு அறிவுறுத்தி உள்ளேன். எனவே ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 20 மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகரிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், சி.டி.இ.டி. தேர்வை 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததால், கால அவகாசம் கருதி சில மொழிகளை நீக்க சி.பி.எஸ்.இ. முடிவு எடுத்தது. ஆனால் இதை ரத்து செய்து நேற்று (நேற்று முன்தினம்) உத்தரவு பிறப்பித்து உள்ளேன். எனவே முன்பு இருந்தது போல 20 மொழிகளிலும் அந்த தேர்வு நடத்தப்படும் என்றார்.
இது குறித்த புதிய உத்தரவை சி.பி.எஸ்.இ. விரைவில் வெளியிடும் என்று கூறிய ஜவடேகர், இதில் எந்த குழப்பமும் தேவையில்லை என்றும் கூறினார். கடந்த 4 ஆண்டுகளில் கல்வித்துறையில் 33 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்த அவர், டிசம்பர் மாதத்துக்குள் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் கூறினார். இப்போது, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 22-ம் தேதி தொடங்க இருந்த விண்ணப்பபதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக விண்ணப்பப்பதிவு ஒத்திவைக்கப்படுகிறது, தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.