தேசிய செய்திகள்

ஊரடங்கால் மேற்கு வங்காளத்தில் சிக்கித்தவிப்பு: 56 நாட்களுக்கு பிறகு இமாசலபிரதேசம் திரும்பிய திருமண கோஷ்டி

ஊரடங்கால் ஒரு திருமண கோஷ்டி மேற்கு வங்காளத்தில் சிக்கித்தவித்து, 56 நாட்களுக்கு பிறகு சொந்த மாநிலமான இமாசலபிரதேசம் போய் சேர்ந்துள்ளது.

தினத்தந்தி

சிம்லா,

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், மனிதர்களின் வாழ்க்கையை பதம் பார்த்து வருகிறது.

ஒருபக்கம் உயிரிழப்புகள், மற்றொரு பக்கம் பொருளாதார இழப்புகள் என்றால் இன்னொரு பக்கம் மனித வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது.

இப்படித்தான் இமாசல பிரதேசத்தை சேர்ந்த ஒரு திருமண கோஷ்டி, மேற்கு வங்காள மாநிலத்திற்கு சென்று ஒரு திருமணத்தை நடத்தி விட்டு, சொந்த ஊர் திரும்புவதற்கு 56 நாட்கள் ஆகி இருக்கின்றன. இது பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

இமாசலபிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள பரோயன் கலான் கிராமத்தை சேர்ந்த சுனில் குமார் (வயது 30) என்ற வாலிபருக்கு, மேற்கு வங்காள மாநிலம், புருலியா மாவட்டம், காஷிப்பூரில் சஞ்சோகிதா என்ற பெண்ணுடன் மார்ச் 25-ந் தேதி திருமணம் செய்து வைக்க இரு தரப்பு பெரியவர்களும் நிச்சயம் செய்தனர்.

இந்த திருமணத்தை மணமகள் வீட்டில் வைத்து நடத்துவதற்கு ஏற்பாடு ஆனது.

திருமண விழாவுக்காக மணமகன் சுனில் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 17 பேர் அடங்கிய குழு, மார்ச் 22-ந் தேதி கொல்கத்தா வந்து சேர்ந்தனர். அந்த நாளில்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும் அந்த நாள் அங்கு தங்கி விட்டு மறுநாள் திருமண கோஷ்டியினர் புறப்பட்டு காஷிப்பூர் வந்து சேர்ந்தனர்.

மார்ச் 25-ந் தேதி திட்டமிட்டபடி சுனில்குமார்-சஞ்சோகிதா ஜோடியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. அந்த நாளில் இருந்துதான் முதல் கட்ட ஊரடங்கும் நாடு முழுவதும் தொடங்கியது.

ஆனால் மார்ச் 26-ந் தேதி இந்த திருமண கோஷ்டியினர் மணமகளுடன் இமாசலபிரதேசத்துக்கு புறப்பட்டு செல்வதற்கு ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

இதனால் அவர்களின் கதி, பரிதாபமானது. எந்த பொது போக்குவரத்து சாதனமும் இயங்கவில்லை. தங்குவதற்கு ஓட்டல்கள் கிடையாது. சாப்பிட உணவு விடுதிகள் இல்லை.

இந்த திருமண கோஷ்டியினர் அடுத்தடுத்த ஊரடங்குகளால் 50 நாட்கள் தொடர்ந்து காஷிப்பூரில் உள்ள சத்திரத்தில் தங்க வேண்டியதாயிற்று. அங்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மணமகள் சஞ்சோகிதாவின் குடும்பத்தினர் செய்து கொடுத்தனர்.

இதற்கு மத்தியில் ஊர் திரும்புவதற்காக சுனில் குமார், மேற்கு வங்காள மாநில அரசு ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ள, அதில் பலன் எதுவும் கிடைக்கவில்லை. இமாசல பிரதேச மாநில மந்திரி வீரேந்தர் கன்வாரை தொடர்பு கொண்டு பேசினர்.

ஒரு வழியாக கடந்த 14-ந் தேதிதான் இவர்கள் வாழ்வில் ஒரு விடியல் பிறந்தது. மாநில அரசிடம் இருந்து இ-பாஸ் கிடைத்தது. அதன்பின்னர் மால்டாவில் இருந்து பஸ் ஏறினர்.

1850 கி.மீ. தொலைவிலான பயணம். 55 மணி நேரம் பயணிக்க வேண்டியதிருந்தது.

கடைசியாக இமாசலபிரதேச மாநிலம், உனா மாவட்ட எல்லைக்கு சென்றபோது, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் கொரோனா வைரஸ் தடுப்புக்காக தனிமைப்படுத்தி விட்டனர்.

இதுபற்றி மணமகன் சுனில் குமார் கூறும்போது, என் அப்பா, 3 சகோதரிகள், என் சித்தி, 4 குழந்தைகள், பிற உறவினர்கள் என எல்லோரும் வசமாக இந்த ஊரடங்கில் மாட்டிக்கொண்டு கஷ்டங்களை அனுபவித்தோம். எங்கள் குழுவை சேர்ந்த எல்லோரும் சொல்லும் வார்த்தை உனது கல்யாணத்தை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது என்பதுதான். என் அம்மா ராஜ்குமாரி திருமணத்துக்கு வரவில்லை. நான் இமாசலபிரதேசம் வந்தும் அம்மாவை பார்க்க போக முடியவில்லை. தனிமைப்படுத்தி விட்டார்கள். வாய்ப்பு கிடைத்தால் தூரத்தில் இருந்தாவது என் அம்மாவை பார்க்க ஆவலாக இருக்கிறேன். எங்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இருக்கிறார்கள். 14 நாட்கள் கழித்துத்தான் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு போக முடியும். அதன்பின்னர்தான் எங்கள் திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்