நாசிக்,
மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகம் உள்ளது. சமீபத்தில் இங்கு நடந்த ஆய்வின் போது அச்சகத்தில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகும். கடந்த பிப்ரவரி 12-ந் தேதி முதல் இந்த மாதம் 12-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த ரூபாய் நோட்டுகள் மாயமாகி உள்ளன.
இதுகுறித்து இந்திய அச்சக பாதுகாப்பு நிறுவன மேலாளர் போலீசில் புகார் அளித்து உள்ளார். புகார் குறித்து போலீசார் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ரூபாய் நோட்டுகள் மாயமான விவகாரம் குறித்து ரூபாய் நோட்டு அச்சக நிர்வாகம் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
நாசிக் ரூபாய் நோட்டு அச்சகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில் அங்கு ரூ.5 லட்சம் ரூபாய் நோட்டுகள் மாயமாகி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. வெளிநபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்ட வாய்ப்பு இல்லை. அச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.