லக்னோ,
உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான கல்யாண் சிங் (வயது 89) உடல்நல குறைவால் காலமானார்.
அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூலை 4ந்தேதி முதல் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்தது. இதனால் அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
எனினும், செப்சிஸ் மற்றும் பல்வேறு உள்உறுப்பு செயலிழப்பால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் மோடி விமானத்தில் லக்னோ நகருக்கு இன்று காலை வந்தடைந்து உள்ளார்.
அவரை விமான நிலையத்தில் உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.