புதுடெல்லி,
சமூக சேவகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாபா இக்பால் சிங் தன்னுடைய 95வது வயதில் நேற்று (சனிக்கிழமை) காலமானார். அவர் கடந்த ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். சமூக பணிகளில் பாபா இக்பால் சிங் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்த வருடம் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக சேவகர் பாபா இக்பால் சிங்கின் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சேவைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த இக்பால் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இவரது சேவையைப் பாராட்டி, 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'பாபா இக்பால் சிங்கின் மறைவு வேதனை அளிக்கிறது. இளைஞர்களிடையே கல்வியை அதிகரிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். சமூக மேம்பாட்டிற்காக அயராது உழைத்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்' என்று கூறியுள்ளார்.