சிம்லா,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதனடிப்படையில், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கல்வி நிலையங்களை திறக்க அரசுகள் முடிவு செய்தன. எனினும், கொரோனா தொற்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனை கவனத்தில் கொண்டு இமாசல பிரதேசத்தில் வருகிற டிசம்பர் 31ந்தேதி வரையில் அனைத்து அரசு கல்வி நிலையங்களையும் மூடுவது என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.
எனினும், வருகிற 26ந்தேதியில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று குளிர்காலத்தில் மூடப்படும் கல்வி நிலையங்கள் தொடர்ந்து, வருகிற 2021ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி முதல் பிப்ரவரி 12ந்தேதி வரை மூடியே இருக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், குளிர்காலத்தில் கூட ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்து உள்ளது.