மாஸ்கோ,
ரஷ்யாவில் அடுத்த வாரம் சர்வதேச பாதுகாப்பு தொடர்பாக 7-வது மாஸ்கோ மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ரஷ்யாவில் சுற்றுப்பயணம் செய்யும் நிர்மலா சீதாராமன், ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி உள்ளிட்ட சில மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தியா- ரஷ்யா இடையேயான பாரம்பரிய நட்பை நிலைநிறுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது. ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம், இந்த தகவலை வெளியிட்டுள்ளது.