புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து அங்கிருந்து வெளியேறினர். இந்த நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஏறக்குறைய 13 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அவர்கள் பலத்த போராட்டத்திற்கு பிறகு அதிகாலை சுமார் 4 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சுமார் 60-க்கும் மேலான குடிசைகள் எரிந்து நாசமாயின. மேலும் இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'காலையில் இந்த சோகமான செய்தியைக் கேட்டேன். நானே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பேன்' என்று கூறியுள்ளார்.