தேசிய செய்திகள்

டெல்லி ஒரே குடும்பத்தில் 9 பேர் பலியான விவகாரம்; தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க முடிவு

ஆம் ஆத்மி டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூட இதே குற்றச்சாட்டை கூறினார்.

புதுடெல்லி

டெல்லியின் தென்மேற்கே பாலம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ராம் சவுக் மார்க்கெட் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 18-ந்தேதி காலை 7.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று சேர்ந்தன. போலீஸ், விமான படை போலீஸ், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினரும் உடனடியாக சென்று சேர்ந்தனர். அவர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது.

எனினும், தீ மளமளவென பரவியதில், 3 சிறுமிகள் உள்பட ஒரே குடும்பத்தின் 9 பேர் பலியானார்கள். தவிர சிறுமி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை கையிலெடுத்து உள்ளது. இந்த சம்பவங்கள் தீவிர மனித உரிமை மீறல்களாக பார்க்கப்படுகிறது என ஆணையம் தெரிவித்ததுடன், டெல்லி தலைமை செயலர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 2 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேட்டு கொண்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அப்போது, பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அவர் கூறும்போது, இது விபத்தல்ல. கொலை. நாட்டின் தலைநகர் டெல்லியில், தீயணைப்பு துறையினரின் ஏணி திறக்கவில்லை என கூறுகிறார்கள். அவர்களிடம் வலை கூட இல்லையா? இதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது? என கேட்டார். பிரதமர், உள்துறை மந்திரி, அனைத்து பெரிய தலைவர்களும் எங்கே வசிக்கிறார்கள்? ஆம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜேந்திர கஷ்யப்பின் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் தீ விபத்தில் பலியாகி உள்ளனர்.

அவர்கள் தொடர்ந்து அலறி கொண்டே இருந்தனர். சத்தம் போட்டபடி இருந்தனர். ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தீயணைப்பு வாகனம் வந்துள்ளது என கூறினார். இதனை சதி செயல் என்றும் குற்றச்சாட்டாக கூறினார். ஆம் ஆத்மி டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூட இதே குற்றச்சாட்டை கூறினார்.