புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மேலும் ஒரு சாட்சியாக டெல்லியில் துப்பாக்கி முனையில் ரூ.70 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கொள்ளை பற்றிய விவரம் வருமாறு:- : டெல்லியில் இருந்து குர்கானுக்கு தொழில் அதிபர் காஷிஸ் பன்சால் (வயது 40) என்பவர் தனது எஸ்.யூவி ரக காரில் சென்று கொண்டிருக்கிறார். நரைனா பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் தொழில் அதிபர் பன்சால் சென்று கொண்டிருக்கும் போது, அவரது காரை, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் வழிமறித்து நிறுத்துகின்றனர்.
இதனால், பதற்றம் அடைந்த பன்சால் தனது காரை நிறுத்துகிறார். உடனடியாக காரை சுற்றி வளைத்த கொள்ளையர்கள், காரில் இருந்த தொழில் அதிபரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகின்றனர். ஒருவர் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவது போல் மிரட்டிய படி நிற்க மீதமுள்ளவர்கள் காரில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர்.
ஒருவழியாக காரில் இருந்து தொழில் அதிபர் பன்சால் இறங்கி ஓடுகிறார். இருப்பினும், அவரை நோக்கியே துப்பாக்கியை குறிவைத்தபடி நிற்கும் ஒரு கொள்ளையன் மிரட்டுகிறான். இதற்கிடையில் மீதமுள்ள இரு கொள்ளையர்களும் காரில் டிக்கியில் இருந்து, பணத்தை கொள்ளையடிக்கின்றனர். பின்னர் மூன்று பேரும் நொடிப்பொழுதில், சம்பவ இடத்தில் இருந்து பைக்கில் தப்பிச்செல்கின்றனர். இந்த சம்பவத்தை அவ்வழியாக செல்லும் மக்கள், சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் அதிபர் பன்சால் பற்றி நன்கு அறிந்த யாரேனும் ஒருவர், இந்த கொள்ளை சம்பவத்திற்கு சதித்திட்டம் வகுத்து கொடுத்து இருக்கலாம் எனவும் கொள்ளையர்கள் பன்சால் பணம் வைக்கும் இடத்தை நன்கு அறிந்து வைத்து இருக்கின்றனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.