புதுடெல்லி,
நாகாலாந்து மாநிலத்தில் கடந்த 1980-ம் ஆண்டு நிதித்துறை கமிஷனராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அலுவாலியா. அப்போது அவர் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிக்கினார். கடந்த 1987-ம் ஆண்டு அவர் நாகாலாந்தில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளர் மற்றும் கமிஷனராக இருந்தபோது அவர் மீது சி.பி.ஐ. போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து டெல்லி மற்றும் கோகிமாவில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், குண்டுகள் போன்ற ஆயுதங்கள் சிக்கின.
32 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் டெல்லி கூடுதல் செசன்சு மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு அனு அகர்வால் தீர்ப்பு கூறினார். ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு 5 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.