புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டுகிறது. அதேநேரத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் படுதீவிரமாக உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி எப்படியாவது கவுரவமான வெற்றியைப் பெற விரும்புகிறது. இதனால் டெல்லி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில், பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:- ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த டெல்லியில் 1000 பள்ளிகள் திறக்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். எங்கே அந்த பள்ளிகள் என அவர் விளக்கம் அளிக்க முடியுமா? டெல்லியில் நன்றாக நடந்து கொண்டிருந்த பள்ளிகளை நாசமாக்கிய தான் ஆம் ஆத்மி அரசின் சாதனை என அமித் ஷா பேசினார்.
அமித்ஷாவிற்கு பதிலடிகொடுக்கும் வகையில் பேசிய டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா,
இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலும் டெல்லி பள்ளிகளுடன் ஒப்பிடக்கூடிய தரமான ஒரு அரசுப் பள்ளியைக் காட்ட முடியுமா? என அமித் ஷாவுக்கு சவால் விடுத்துள்ளார்.