புதுடெல்லி,
டெல்லியில் தவுலா குவானில் போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட நபரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது என டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
30 வயதுடைய அந்நபரிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கி, வெடிக்காத தோட்டாக்கள் ஆகியவற்றை டெல்லி போலீசார் கைப்பற்றினர். பிரஷர் குக்கரில் வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பின்பு, ரிட்ஜ் சாலையில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் வைத்து செயலிழக்க செய்யப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் வெவ்வேறு முரண்பட்ட தகவல்களை அவர் கூறியுள்ளார். பின்னர், ஆப்கானிஸ்தான் நாட்டின் கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். தளபதிகளிடம் பயிற்சி பெற்றது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையளதளம் வழியாகவும் அந்த நபர் தொடர்பில் இருந்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடனும் அந்நபர் தொடர்பில் இருந்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பலராம்பூருக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.