புதுடெல்லி,
டெல்லியின் யமுனா விஹார் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீஸ் தலைமைக்காவலர் ரத்தன்லால் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய டெல்லி காவல் ஆணையரை அறிவுறுத்தியுள்ளதாக டெல்லி ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய ஆளுநர், அனைத்து தரப்பினரும் அமைதி நல்லிணக்கத்தை பேண வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியில் சில இடங்களில் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடைபெறுவதாக வரும் செய்திகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சர் , சட்டம் ஒழுங்கை உறுதி செய்து அமைதியை உறுதி செய்ய நடவடிக்கை எடுங்கள்.வன்முறையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.