புதுடெல்லி,
இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் கைது
இந்த வழக்கில் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் செராவத் தலைமையிலான போலீஸ் படையினர் தினகரனையும், மலிலிகார்ஜூனாவையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே டி.டி.வி.தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே ரூ.10 கோடி பண பரிமாற்றத்தில் தொடர்பாளராக செயல்பட்டவர், டெல்லி சாந்தினி சவுக் பகுதியை சேர்ந்த ஹவாலா தரகர் (சட்டவிரோத பண பரிமாற்ற தொடர்பாளர்) நரேஷ் என்ற நத்துசிங் என்பதை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.
அவரை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அவர் தாய்லாந்து சென்றிருப்பதை அறிந்து அவரது வருகைக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் 27-ம் தேதி இரவு டெல்லி திரும்பிய நரேஷ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நரேஷை சாணக்கியபுரி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று முதல்கட்ட விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், அதைத் தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு தனிக்கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதற்கிடையே இந்த பேரம் தொடர்பாக மற்றொருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஷா பைசல் என்ற ஹவாலா ஏஜெண்டிடம் ஏற்கனவே டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை அடையாளம் காட்டினார். சுகேஷ் சந்திரசேகருக்கு இவர் ஹவாலா பரிவர்த்தனை மூலமாக ரூ.10 கோடி தந்ததாக கூறப்பட்டது. நரேஷ் அந்த பணத்தை சென்னையில் இருந்து கொச்சி வழியாக டெல்லி சாந்தினி சவுக் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு உதவியதாக கூறப்படுகிறது. ஆனால் ஷா பைசல் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் டெல்லி போலீசார் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்ட ஓட்டல் அறையில் ஏற்கனவே அவருக்கு நெருக்கமான ஒருவர் இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த நபர் இந்த நரேஷ் ஆக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியது.
ரூ. 50 லட்சம் பறிமுதல்
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸ் கைது செய்யப்பட்ட ஹவாலா தரகர் நரேஷிடம் இருந்து ரூ. 50 லட்சத்தை பறிமுதல் செய்து உள்ளது. விசாரணையின் அடிப்படையிலேயே இந்த பணமானது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணம் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சமாக கொடுக்க இடைத்தரகர் சுகேஷிடம் கொடுக்க கொண்டுவரப்பட்டது என தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதற்கிடையே தினகரனின் வங்கி கணக்கு விபரங்களை அளிக்கவும் டெல்லி போலீஸ் உத்தரவிட்டு உள்ளது.
தினகரனின் எஸ்பிஐ வங்கி கணக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.