புதுடெல்லி,
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்சேவை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, அதிபராக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார்.
3 நாள் பயணமாக வந்துள்ள அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார். இன்று காலை, ஜனாதிபதி மாளிகை வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கோத்தபய ராஜபக்சேவை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினர்.
பின்னர் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபராக இந்தியா வருவது இதுதான் முதல் முறை என்றார். மேலும், இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் எனவும், பாதுகாப்பு -பொருளாதார பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.