தேசிய செய்திகள்

வீட்டுக்கு நேரில் சென்று அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்

அருண் ஜெட்லி வீட்டுக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, கடந்த சனிக்கிழமை காலமானார். எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அருண் ஜெட்லி மறைந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்கிருந்தபடி, அருண் ஜெட்லி மறைவுக்கு டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அருண் ஜெட்லி குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார்.

பஹ்ரைன் நாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், என் இனிய நண்பர் அருண் ஜெட்லி மறைந்தநிலையில், நான் இங்கு இருப்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

இந்நிலையில், 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி நேற்று அதிகாலை டெல்லி வந்து சேர்ந்தார். காலையில் அவர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி வீட்டுக்கு சென்றார்.

அவருக்கு முன்பாக அங்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மோடியை வரவேற்றார். அருண் ஜெட்லியின் மகன் ரோஹனும் வரவேற்றார்.

வீட்டுக்குள், அருண் ஜெட்லி மனைவி, மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். உள்ளே சென்ற பிரதமர், அருண் ஜெட்லி படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சுமார் 25 நிமிடங்கள் அவர் அங்கு இருந்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது