புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச குழு ஒன்றை அமைத்து இருக்கிறது. இந்த குழுவினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்தநிலையில் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந் தேதி ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. வன்முறை சம்பவங்களில் இதுவரை 23 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் சுமார் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
கலவரம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, வன்முறையை கட்டுப்படுத்தவும், வன்முறையாளர்களை கைது செய்யவும் கோரி நேற்று முன்தினம் இரவு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசரம் கருதி ஐகோர்ட்டு நீதிபதி சி.முரளிதர் வீட்டில் அந்த மனு மீது விசாரணை நடைபெற் றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.முரளிதர் அனுப் ஜே.பம்பானி ஆகியோர், கலவரத்தில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.முரளிதர், தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கலவரம் தொடர்பான அறிக்கையை மதியம் 12.30 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டனர்.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் சினேகா முகர்ஜி வாதாடுகையில், சிலர் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வன்முறைக்கு வித்திட்டதாக கூறினார்.
பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதுதொடர்பான வீடியோ இருந்தால் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் அந்த வீடியோ கோர்ட்டில் நீதிபதிகளுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.
பின்னர், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாரதீய ஜனதா தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாகுர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு டெல்லி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, டெல்லி கலவரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது டெல்லியில் நடந்த மோதல் சம்பவங்கள் துரதிருஷ்டமானவை என்று கூறிய நீதிபதிகள், மெத்தனபோக்குடன் நடந்து கொண்டதாகவும், வன்முறையை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தனர். வன்முறையை தூண்டும் வகையில் யாராவது பேசினால், மேலிட உத்தரவுக்காக காத்திருக்காமல் சட்டப்படி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மனுக்களை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.