தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை; 60 சமூக வலைதள கணக்குகள் தொடங்கி 4 நாட்களில் மூடப்பட்டன: அமித் ஷா பேச்சு

டெல்லி வன்முறை சம்பவத்தின்பொழுது ஒரே நாளில் 60 சமூக வலைதள கணக்குகள் தொடங்கி 4 நாட்களில் அவை மூடப்பட்டன என அமித் ஷா பேசியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின.

டெல்லி ஷாகீன்பாக்கில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் கடந்த பிப்ரவரி 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மரணமடைந்தனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 53 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலித்தது. இதுபற்றி விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரண்ட நிலையில், இதற்கு பதிலளிக்க வேண்டிய அரசியல் சாசன பொறுப்பு எனக்கு இருக்கிறது என நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று கூறினார்.

அவை உறுப்பினர்கள் முன் அவர் தொடர்ந்து பேசும்பொழுது, ஒன்றுமறியாத நபருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாங்கள் உறுதி அளிக்கிறோம். ஆயுத சட்டத்தின் கீழ் 43 வழக்குகள் பதிவாகி உள்ளன. 153 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கடந்த பிப்ரவரி 25ந்தேதியில் இருந்து 650 அமைதி கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

குறுகிய காலத்தில் பெரிய அளவில் வன்முறை பரவுவது என்பது திட்டமிடாமல் சாத்தியமில்லை. இந்த கோணத்தில் விசாரிக்க சதித்திட்ட வழக்கு பதிவு செய்துள்ளோம். வடகிழக்கு டெல்லியில் வன்முறைக்கு நிதியுதவி வழங்கிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டெல்லி வன்முறை சம்பவத்தின்பொழுது ஒரே நாளில் 60 சமூக வலைதள கணக்குகள் தொடங்கி 4 நாட்களில் அவை மூடப்பட்டு உள்ளன. இதற்கு பின்னால் உள்ளவர்களை போலீசார் கண்டுபிடிப்பர். வெறுப்புணர்வு தூண்டுவதற்கு சமூக ஊடகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது என அமித் ஷா பேசியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்