புதுடெல்லி
டெல்லியின் பழமையான வரலாற்றை கவுரவிக்கும் வகையில் அதன் பெயரை இந்திர பிரஸ்தா என மாற்ற வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பா.ஜ.க. எம்.பி. பிரவீன் கந்தேல்வால் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நம்முடைய நாட்டின் தலைநகர் டெல்லியின் அடையாளத்துடன் தொடர்புடைய வரலாறு மற்றும் நாகரீக முக்கியத்துவம் தொடர்பான விவகாரம் பற்றி உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த கடிதம் எழுதினேன்.
உலகின் மிக பழமையான நாகரீகங்களில் ஒன்றாக நாட்டின் தலைநகர் உள்ளது. நகரின் பெயர் அதன் உண்மையான வரலாற்று வேர்களையும், கலாசார மரபையும் பிரதிபலிக்கும் வகையில் இருப்பதே முறையாக இருக்கும்.
வரலாற்று சிறப்புமிக்க இலக்கியங்கள், தொல்லியல் துறையின் தகவலின்படி மற்றும் நீண்டகால நாகரீக மரபுகள் கூறுவது என்னவென்றால், டெல்லியானது பழமையான இந்திர பிரஸ்தா என்ற பெயரால் அழைக்கப்பட்டது. மகாபாரத இதிகாசத்தில் வரும் பாண்டவர்கள் இந்த பெரிய நகரை உருவாக்கினர்.
யமுனை ஆற்றின் கரையில் பிரமிக்கும் வகையில் இந்த நகரை உருவாக்கினர். அது நவீன டெல்லியுடன் ஒத்து போகிறது என குறிப்பிட்டுள்ளார். டெல்லி என்ற தற்போது அழைக்கப்படும் பெயர், நகரின் பழமை மற்றும் உண்மையான பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.