திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந்தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை கடந்த 8-ந்தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்துவரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ள நீரில் மிதக்கிறது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகிவிட்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
100 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை கேரளம் சந்தித்துள்ளது. 80 அணைகள் நிரம்பியதால் அவை திறக்கப்பட்டன. 2.2 லட்சம் பேர் 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று, திருவனந்தபுரம் சென்றார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து தனிவிமானம் மூலம் கொச்சி சென்றார். ஆனால், அங்கு கனமழை தொடர்ந்ததால், பிரதமர் மோடி தனது ஆய்வை உடனடியாக மேற்கொள்ளவில்லை. ஆய்வுக்கு முன்பாக, கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் உடன் சென்றனர்.
கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதியாக ரூ.500 கோடி அறிவித்து உள்ளார்.
இந்தநிலையில் கேரள முதல்-மந்திரி பினராஜி விஜயன் செய்தியார்களிடம் கூறியதாவது:
மோசமான வானிலை காரணமாக சில இடங்களில் ஆய்வு செய்ய முடியவில்லை. அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் .
கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதியாக ரூ.500 கோடி அறிவித்து உள்ளார் அது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கிடைக்கும். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க கூடுதல் ஹெலிகாப்டர்கள், படகுகளை அனுப்ப வேண்டும் என பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.