தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு: மும்பையில் போராட்டம் வெடித்தது

மும்பை ஆரே காலனியில் மெட்ரோ ரெயில் பணிக்காக மரங்கள் வெட்டுவதை கண்டித்து போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மும்பை,

நாட்டின் நிதி நகரான மும்பையில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொலபா-பாந்திரா-சீப்ஸ் இடையே செயல்படுத்தப்படும் 3-வது மெட்ரோ வழித்தடத்தின் பணிமனையை மும்பை ஆரே காலனி பகுதியில் அமைக்க மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக மும்பையின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் ஆரே காலனி பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 656 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் உள்பட பிரபலங்களும், பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து ஆரே காலனியில் மரங்கள் வெட்டும் பணியை மெட்ரோ ரெயில் கழகம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

இதுபற்றி அறிந்ததும் அங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் திரள தொடங்கினர். அவர்கள் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மரங்கள் வெட்டுவதை தடுத்து நிறுத்தவும் முயன்றனர். போலீசார் அங்கு வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையிலும் மரங்களை வெட்டும் பணியில் மெட்ரோ ரெயில் கழகம் தீவிரமாக இறங்கியது. இருப்பினும் ஆரே காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் முகாமிட்டு இருந்தனர். எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அங்குள்ள சாலைகளும் மூடப்பட்டு பஸ் போக்குவரத்து மாற்று வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டன. அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் போராட்டம் தீவிரம் அடைந்து பதற்றம் அதிகரித்தது. இதனால் போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

இதனால் கோபம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீசாரை தாக்கினர். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா பெண் பிரமுகர் பிரியங்கா சதுர்வேதி உள்பட சுமார் 60 பேரை போலீசார் பிடித்து சென்றனர். பின்னர் அவர்களில் 6 பெண்கள் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மரங்கள் வெட்டும் பணி நடந்தது.

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆரே காலனி பிரச்சினை பூதாகரமாகி உள்ளது.

இதுபற்றி மத்திய சுற்றுச் சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், மரங்கள் வெட்டப்படும் ஆரே காலனி வனப்பகுதி அல்ல. இதை மும்பை ஐகோர்ட்டும் உறுதி செய்து உள்ளது.

டெல்லியில் முதலாவது மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும்போது 25 மரங்கள் வரை வெட்ட வேண்டியது இருந்தது. அப்போதும் இப்படி தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் ஒரு மரம் வெட்டப்பட்டபோது, அதற்கு பதிலாக 15 மரக்கன்றுகள் நடப்பட்டன. இன்று டெல்லியில் பொது போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டது போல பசுமையும் அதிகரித்து உள்ளது என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது