மும்பை,
கர்நாடகாவில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பாரதீய ஜன 105 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 224 பேர் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள் என்பதால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பான்மையை உறுதி செய்யாமல் ஏதோ ஒரு தைரியத்தில் மே 17ம் தேதி முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா.
இதை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு தொடரவே, அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 24 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பதவி ஏற்ற 2 நாட்களில் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
இதே நிலைமைதான் தற்போது மராட்டியத்திலும் ஏற்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.
இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மராட்டிய சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
தீர்ப்பை தொடர்ந்து மும்பை இல்லத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுடன் துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் பதவி விலகி உள்ளார். இதை தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.
மும்பையில் நிருபர்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
தேர்தலில் பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்தது, பாஜகவுக்கு அதிகபட்சமாக 105 இடங்கள் கிடைத்தன. நாங்கள் சிவசேனாவுடன் போட்டியிட்டோம், மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். ஏனெனில் நாங்கள் போட்டியிட்டு 70 சதவீத இடங்களை வென்று உள்ளோம்.
நாங்கள் அவர்களுக்காக (சிவசேனா) காத்திருந்தோம், ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை, அதற்கு பதிலாக காங்கிரஸ்-என்.சி.பி.யை சந்திக்க சென்றனர். என்சிபி மற்றும் காங்கிரசுடன் அரசாங்கத்தை உருவாக்க திட்டமிட்டனர்.
அஜித்பவார் என்னுடன் கூட்டணியில் தொடர முடியாது என தெரிவித்தார்.
நான் ராஜ் பவன் சென்று கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசாங்கத்தை அமைக்கலாம். அவர்களிடம் பெரும் கருத்துவேறுபாடு இருப்பதால் அது மிகவும் நிலையற்ற அரசாங்கமாக இருக்கும்.
இந்த மூன்று சக்கர வண்டி அரசு நிலையானதாக இருக்குமா என்று நான் சந்தேகிக்கிறேன், ஆனால் பாஜக ஒரு திறமையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களின் குரலை சட்டசபையில் ஒலிக்கும் என கூறினார்.