புதுடெல்லி
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இது குறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. நாட்டையே உலுக்கிய இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியது. பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ஆ.ராசா- கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யபட்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2ஜி ஊழல் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று. நாட்டையே உலுக்கியதுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வீழ்வதற்கும் காரணமாக இருந்தது. இன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ வேண்டுமென்றே இந்த வழக்கில் குழப்பியுள்ளதோ? மக்களுக்கு பதில் வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.