புதுடெல்லி,
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மேலவையில் நடந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது அவர், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி சுட்டி காட்டி பேசினார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு சூழலை பார்ப்பது அல்லது ஒரு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி யோசிப்பதற்கும் காங்கிரசின் செயல்பாட்டிற்கும் பெரியதொரு வித்தியாசம் உள்ளது என்றார்.
நாங்கள், நாட்டின் 140 கோடி குடிமக்களையும், சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்ற வகையில் அணுகுவோம். குடிமக்களையும், அவர்களின் திறன் மீதும் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இதுவே ஜனநாயகத்தின் உண்மையான வலிமை. ஆனால், காங்கிரசோ குடிமக்களை பிரச்சனையாக கருதுகிறது.
இதற்கான எடுத்துக்காட்டை நான் கூறுகிறேன். ஈரானுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சென்றார். அவர் அந்நாட்டில் பேசும்போது, என்னுடைய தந்தையான நேருவிடம் சிலர் உங்களுக்கு எத்தனை பிரச்சனைகள் உள்ளன? என கேட்டனர். அவரோ, 35 கோடி என்றார். அந்த நேரத்தில், எங்களுடைய நாட்டின் மக்கள் தொகை 35 கோடி என்றார்.
நாட்டின் குடிமக்களை நேருஜி பிரச்சனையாக பார்த்துள்ளார். இதுபோன்ற ஒரு தலைவர் இருக்க முடியுமா? என பிரதமர் மோடி கேட்டார்.
இந்திரா காந்தி இந்த எடுத்துக்காட்டை கூறி விட்டு, தொடர்ந்து பேசும்போது, இன்று நாட்டின் மக்கள் தொகை 57 கோடி. என்னுடைய பிரச்சனைகளும் அந்த எண்ணிக்கையில் உள்ளன என்றார்.
சொந்த குடிமக்களை பிரச்சனையாக கருதும் இதுபோன்ற யாரேனும் உண்டா? இதுவே அவர்களுடைய சிந்தனைக்கும், எங்களுடைய சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம். அவர்களுடைய அணுகுமுறைக்கும், எங்களுடைய அணுகுமுறைக்கும் உள்ள வித்தியாசம் என கூறினார்.