கொல்கத்தா,
இடதுசாரி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜனதாவை கடுமையாக எதிர்த்து வருகிறது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.
குறிப்பாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆர்வமாக உள்ளார். ஆனால் முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்தும், அவருடைய ஆதரவாளர்களும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். அப்படி கூட்டணி வைத்தால் மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் கட்சியின் நிலைமை மோசமடையும் என்பதால் காங்கிரசுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று இவர்கள் கூறுகின்றனர்.
கருத்து வேறுபாடு
கடந்த மாதம் 21-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்ற ஒரு அரசியல் வரைவு தீர்மானம் சீதாராம் யெச்சூரி ஆதரவாளர்களால் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இதற்கு எதிராக பிரகாஷ் கரத் ஆதரவாளர்கள் ஓட்டுப்போட்டனர். தேர்தலுக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதோ, காங்கிரசை அனுசரித்து செல்வதோ கூடாது என்று பிரகாஷ் கரத் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் கட்சி தலைவர்களிடையே கருத்துவேறுபாடு காணப்படுகிறது.
நடுநிலை கொள்கை
மேலும் இதன்காரணமாக கட்சி பிளவு படும் நிலை உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தடுக்க நடுநிலையாக செயல்படலாம் என்று கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி கட்சியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஹன்னன் மொல்லா கூறுகையில், கட்சியின் முக்கிய தலைவர்கள் இருவருமே பொதுமக்கள் மத்தியில் கட்சி குறித்து தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். எனவே இப்பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்றார்.
கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, காங்கிரசுடன் கூட்டணி வைப்பதில் நடுநிலை கொள்கையை பின்பற்ற கட்சி மேலிடம் முயற்சித்து வருகிறது. இதனால் கட்சியின் இரு அணிகளையும் திருப்திபடுத்தும் விதமாக அமைதி வழியில் வரைவு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படும். அதில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை சிறிய அளவில் அனுசரித்து செல்லலாம் என்று யோசனை தெரிவிக்கப்படும் என்றார்.
எச்சரிக்கை
பாராளுமன்ற முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், 1996-ம் ஆண்டு ஜோதிபாசுவை பிரதமர் ஆகாமல் தடுத்து கட்சி மிகப்பெரிய தவறை செய்தது. இதேபோல் 2004-ம் ஆண்டு மத்திய அரசில் பங்கேற்க தவறியது. இப்போது காங்கிரசுடன் கூட்டணி அமைக்கத் தேவையில்லை என்று முடிவு செய்தால் அது எதிர்காலத்தில் மிகப்பெரிய தவறாக அமையும் என்று எச்சரித்தார்.
மற்ற இடது சாரி கட்சிகளான ஆர்.எஸ்.பி. மற்றும் பார்வர்டு பிளாக் ஆகியவை காங்கிரசுடன் கூட்டணி வைப்பது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.