தேசிய செய்திகள்

மூச்சு விட சிரமம், கண்களில் எரிச்சல்... டெல்லியில் வாழ்க்கை மோசம்: யோகி ஆதித்யநாத்

டெல்லியில் காற்று தரக்குறியீடு மோசமடைந்து உள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாசு அதிகரித்து காணப்படுகிறது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் புதுப்பிக்கப்பட்ட அரசு அலுவலக கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பின்னர் பேசும்போது, இன்றைய மிகப்பெரிய உலகளாவிய சவால்களில் ஒன்று சுற்றுச்சூழல் சீரழிவு என்று கூறினார்.

உத்தர பிரதேசத்தில் சுற்றுச்சூழல் மிகவும் நன்றாக உள்ளது. மாசு இல்லை. அதனால், குறைவான நோய்களே உள்ளன. எப்போது மாசுபாடு தொடர்ந்து இருக்கிறதோ, அப்போது அது நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும். நம்முடைய பிராண வாயு விநியோகம் பாதிக்கப்படும்போது, ​​ஒட்டுமொத்த உடலும் பாதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

அவர் பேசி கொண்டிருக்கும்போதே பா.ஜ.க. ஆளக்கூடிய டெல்லியையும் குறிப்பிட்டார். டெல்லியிலுள்ள நிலைமையை பார்த்தீர்களா? வாயு அறையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நிலைமை மோசமடைந்து உள்ளது. சுவாசிப்பது கடினம். கண்களில் எரியும் உணர்வும் உள்ளது.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களையும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளையும் வீட்டிலேயே இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது என்ன வகையான வாழ்க்கை? என வேதனையுடன் குறிப்பிட்டார். இதேபோன்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூட டெல்லியில் நிலைமை மோசமடைந்து உள்ளது என கடந்த காலத்தில் சுட்டி காட்டி பேசினார்.

டெல்லியில் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக பழைய வாகன பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளிலும், பொது போக்குவரத்தில் மின்சார பஸ் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியுள்ளது. எனினும், டெல்லியில் காற்று தரக்குறியீடு மோசமடைந்து உள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாசு அதிகரித்து காணப்படுகிறது.