புதுடெல்லி,
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த இரு தரப்பு பிரமாண பத்திரங்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முடிவு செய்தனர்.
அதன்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றனர்.
நேற்று காலை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதியை சந்தித்து, பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக பேச திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி, வெளிநாடு சென்றிருப்பதால், அவருக்கு அடுத்துள்ள அதிகாரியை சந்திக்க முடிவு செய்தனர்.
முன்னதாக, மூத்த வக்கீல் ஒருவருடன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, அவர் வழங்கிய ஆலோசனையை தொடர்ந்து, பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறும் முடிவை அனைவரும் கைவிட்டனர்.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான புகழேந்தி, அன்பழகன் (முன்னாள் எம்.எல்.ஏ.), வக்கீல் செந்தில் ஆகியோர் நேற்று திடீரென டெல்லி சென்றனர். தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் அவர்கள் ஒரு மனு அளித்தனர்.
பின்னர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளோம். அந்த மனுவில், இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக இனி எந்த மனு அளிக்கப்பட்டாலும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்களை அழைத்து பேசி, எங்கள் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
சட்ட விதிகளின்படி புதிய நிர்வாகிகள் நியமனத்தை தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி கட்சியின் புதிய நியமனங்கள் மற்றும் நீக்கங்கள் குறித்து மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து வருகிறோம்.
பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உண்டு. அ.தி.மு.க. சட்டவிதி அதைத்தான் கூறுகிறது. அவர்கள் நடத்தப்போவது பொதுக்குழுவே அல்ல. அதை கூட்டுவதற்கு எந்த வித உரிமையும் அவர்களுக்கு கிடையாது.
நாங்கள் இப்போது மனது வைத்தாலும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு செல்வோம். ஆனால் டி.டி.வி.தினகரன்தான் ஒரு நல்ல நாளில் செல்லலாம் என்று கூறியிருக்கிறார். போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று பயப்படவில்லை. ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டபோது பெரும் எழுச்சி ஏற்பட்டது. அவர் மீண்டும் கைது செய்யப்பட்டால் அடுத்த 2 மாதங்களில் டி.டி.வி.தினகரன்தான் முதல்-அமைச்சர். இவ்வாறு புகழேந்தி கூறினார்.
தினகரன் ஆதரவாளர்களின் இந்த நடவடிக்கையால் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்துக்கு பிறகே தேர்தல் கமிஷனை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாட இருப்பதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.