கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சமூக வலைதளங்களில் விவாதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்கக் கோரி வக்கீல் எம்.எல்.சர்மா, மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், பரஞ்சோய் குகா தாகூர்தா, எஸ்.என்.எம்.அபிதி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ்குமார் சிங், இப்ஸா சதாக்ஷி, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 5-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ரிட் மனுக்கள் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவை தீவிரமானவை என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும் ரிட் மனுக்களை மத்திய அரசுக்கு வழங்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 10-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி, ரிட் மனுக்கள் தனக்கு கிடைக்கப்பெற்றதாகவும், அவற்றை படித்துப் பார்க்கவும், மத்திய அரசிடம் கலந்தாலோசிக்கவும் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.

அதையடுத்து தலைமை நீதிபதி ரமணா, தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணையை கோரியுள்ள ரிட் மனுதாரர்களில் சிலர் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். விவாதத்துக்கு எதிராக கோர்ட்டு இல்லை. ஆனால், இந்த விவகாரம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது இங்குதான் கலந்தாராய வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் விவாதிக்கக் கூடாது.

மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் இரு தரப்புக்கும் கோர்ட்டு கேள்விகளை எழுப்பி பதில் அளிக்க உத்தரவிடுகிறது. கோர்ட்டு எழுப்பும் கேள்விகளுக்கு கோர்ட்டில் வக்கீல்கள் மூலம் பதில் அளிக்க வேண்டும். கோர்ட்டுக்கு வெளியே பதில் அளிக்கக் கூடாது. மனுதாரர்கள் நீதித்துறை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என தெரிவித்து, விசாரணையை ஆகஸ்டு 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து