புதுடெல்லி,
விமான நிலையங்களில் பாதுகாப்பு பொறுப்பை கவனிக்கும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் ஐ.ஜி. விஜய் பிரகாஷ், சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர், சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவின் முந்தைய சுற்றறிக்கைப்படி, விமானத்தில் பயணிகள் தங்களுடன் ஒரே ஒரு கைப்பை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஆனால், பயணிகள் சராசரியாக இரண்டு, மூன்று கைப்பைகளுடன் பாதுகாப்பு சோதனைக்கு வருகின்றனர்.
இதனால், சோதனை நடத்த நேரம் ஆகிறது. நெரிசல் ஏற்பட்டு, சக பயணிகளுக்கு அசவுகரியம் உருவாகிறது. பாதுகாப்பு பிரச்சினையும் உண்டாகிறது. ஆகவே, ஒரு பயணி ஒரு கைப்பையுடன் மட்டுமே விமானத்தில் ஏற வேண்டும் என்ற விதிமுறையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். மற்ற கைப்பைகள் மற்றும் உடைமைகளை விமானத்தின் சரக்கு பிரிவில் ஏற்றப்பட வேண்டும். இதுதொடர்பாக விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஐ.ஜி. விஜய் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.