அலகாபாத்,
மரக் கன்றுகளைச் சேதப்படுத்தியதற்காக, 2 குதிரைகளும், 2 கழுதைகளும் 4 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவித்த சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தின் விவரம் பின்வருமாறு:-
உத்தர பிரதேச மாநிலம் உரய் மாவட்டத்தின் ஜாலோன் நகரில் உள்ள மாவட்டச் சிறை வளாகத்தில், அழகு படுத்துவதற்காக, பல வகையான மரக் கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. 3 நாள்களுக்கு முன், இந்த வளாகத்தில் நுழைந்த 2 குதிரைகளும், 2 கழுதைகளும் இங்குள்ள மரக் கன்றுகளைக் கடித்து, சேதப்படுத்தின. அதையடுத்து, 4 விலங்குகளையும் சுற்றி வளைத்துப் பிடித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. 4 நாள் சிறைத் தண்டனைக்குப் பிறகு, அந்த 4 விலங்குகளும் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் கடித்து சேதப்படுத்திய செடிகள் அனைத்தும் ரூ.5 லட்சம் செலவில் அண்மையில்தான் வாங்கி வைக்கப்பட்டது இந்த தகவலை ஜலோன் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி கைது செய்யப்பட்ட விலங்குகளின் உரிமையாளர் கூறும் போது, இரண்டு நாள்களுக்கு முன், என்னுடைய குதிரைகளும், கழுதைகளும் காணாமல் போய்விட்டன. அவற்றை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, உள்ளூர் பாஜக பிரமுகர்களின் உதவியுடன், சிறையில் இருந்த எனது கழுதைகளையும், குதிரைகளையும் மீட்டேன் என தெரிவித்தார்.