புதுடெல்லி,
தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தும் விதமாக முதல் டோஸை 50 சதவீதத்திற்கும் குறைவாகவும், 2வது டோஸை குறைந்த எண்ணிக்கையிலும் செலுத்தியுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மராட்டியம் , மேகாலயா உள்ளடக்கிய மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாகவும் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் உள்ள குழப்பத்தை உள்ளூர் தலைவர்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், மாவட்டங்களில் புதுமையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.