பெங்களூரு,
இஸ்ரோ தலைவராக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவனின் பதவிகாலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த எஸ்.சோம்நாத் (58) ஐ.எஸ்.ஆர்.ஓ புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேரளாவில் இருந்து இஸ்ரோ தலைவர் ஆகும் ஐந்தாவது நபர் சோம்நாத். தற்போது திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் இயக்குநராக இருக்கும் எஸ்.சோம்நாத் ஆலப்புழா மாவட்டம் துறவூர், அரூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியராக பணிபுரிந்த ஸ்ரீதர பணிக்கர், தாய் தங்கம்மாள். கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் சோம்நாத்.
பின்னர் பெங்களூர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ்-ல் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் கோல்ட் மெடலுடன் படிப்பை பூர்த்தி செய்தார். 2018-ல் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டர் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் இஸ்ரோவின் தலைவராக சோம்நாத் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும், இஸ்ரோவின் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் சோம்நாத் இன்று பதவியேற்றுக்கொண்டார். அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு சோம்நாத் இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.