பெங்களூரு,
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்திய போது போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் வந்திருந்த கூரியர் பார்சல்களில் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது கூரியரில் வந்திருந்த ஒரு பை மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அந்த பையில் ஆவணங்கள் கொண்டு செல்வதற்கான பை என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து, பார்சலை திறந்து பார்த்த போது, அந்த பையில் எந்த ஒரு போதைப்பொருட்களும் இல்லை என்பது தெரியவந்தது.
பின்னர் நவீன கருவிகள் மூலமாக சோதனை நடத்திய போது, அந்த பைக்குள் போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பைக்குள் போதைப்பொருட்களை வைத்துவிட்டு, அதன்மீது துணிகளை மர்மநபர்கள் தைத்திருந்தனா. அதனை பிரித்துபார்த்த போது தான் போதைப்பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அதாவது அந்த பையில் ஒட்டு மொத்தமாக ரூ.5.30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் இருந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
இதையடுத்து, அந்த பை யாருடைய முகவரிக்கு வந்தது என்றும், அவரை பற்றிய தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.