ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து நேற்று ரோஷன் குமார், பவானி சிங் காரில் பார்மர் சென்றுகொண்டிருந்தனர். அந்த இளைஞர்கள் மது அருந்திவிட்டு அதி வேகமாக காரை ஓட்டியுள்ளனர். மேலும் காரை வேகமாக செலுத்துவதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்துள்ளனர்.
தேவிகோட் மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்ற கலா மற்றும் அவரது மகன் மனிஷ் (வயது 13) மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனாலும் நிற்காமல் சென்ற கார் எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் மது போதையில் காரை ஓட்டிய ரோஷன் குமார் மற்றும் பவானி சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.