புதுடெல்லி
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த கோரிக்கை மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளதாக அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியிடபட்டு இருந்தது.
அதுபோல் இன்று பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணை மந்திரி நித்தியானந்தா ராய்
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என பதிலளித்தார்.